திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கார் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பாடியந்தல் கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன், தனது மனைவி வளர்மதி, மருமகள் ஜெயந்தி, பேத்தி ரிதன்யா ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகேயுள்ள ஊத்தூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். பின்னர் அனைவரும் காரில் கள்ளக்குறிச்சிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.


கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் திருவண்ணாமலை – போளூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஞானசேகரன் காரின் மீது எதிரே வந்த அரசுப்பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. மேலும், காருக்கு முன்னால் செனற இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இந்த விபத்தில் ஞானசேகரன் மனைவி வளர்மதி, கார் ஒட்டுநர் கோபிநாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஞானசேகரன், மருமகள் ஜெயந்தி, பேத்தி ரிதன்யா உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து கலசப்பாக்கம் போ லீசா ர் விசாரித்து வருகின்றனர்.
