Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மனு உச்ச...

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

-

- Advertisement -

ராம்சார் அங்கீகாரம் பெற்ற சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், 1,250 வீடுகள் கொண்ட பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கட்டுமான நிறுவனங்களின் ரிட் மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கரணை

we-r-hiring

வழக்கின் பின்னணி என்ன?

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியின் இயல்பை அழிக்கும் வகையில், “பிரிகேட் மார்கன் ஹைட்ஸ்” என்னும் நிறுவனத்திற்கு 1,250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அனுமதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, சி.எம்.டி.ஏ (CMDA) மற்றும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ஆகியவை இந்த அனுமதியை வழங்கியிருந்தன.

சதுப்பு நிலப் பகுதியில் இவ்வளவு பெரிய கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதற்குச் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அரசியல் எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2025 அக்டோபர் மாதம் இந்த கட்டுமானத் திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது.

அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கான காரணம்

நிலைமை இவ்வாறு இருக்க, கடந்த மே 8ஆம் தேதி நடைபெற்ற மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையக் கூட்டத்தில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. “தமிழ்நாடு ஈரநில ஆணையத்தின் (Tamil Nadu Wetlands Authority) தடையில்லாச் சான்றைப் பெறாமல் கட்டுமானத்தைத் தொடங்கக் கூடாது” என்ற நிபந்தனையை அந்த நிறுவனங்கள் மீறியதால், இந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து, ‘பிரிகேட் எண்டர்பிரைசஸ் லிமிட்டெட்’ மற்றும் ‘மார்கன் ஏசியா பிரைவேட் லிமிட்டெட்’ ஆகிய நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “சுமார் ₹2,000 கோடி மதிப்பீட்டிலான இந்தத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றமும் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் இதனால் தவித்து வருகின்றன. சுற்றுச்சூழல் அனுமதியில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நிவர்த்தி செய்ய நிறுவனங்கள் தயாராக உள்ளன. எனவே, உச்ச நீதிமன்றம் இதில் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என வாதிட்டார்.

கட்டுமான நிறுவனங்களின் வாதத்திற்குத் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்பிரியா கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். “சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்கு என்றே ‘தேசிய பசுமை தீர்ப்பாயம்’ (NGT) உள்ளது. அதுவே இதற்குரிய தகுந்த அமைப்பு என்பதால், இந்த ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் நேரடியாக விசாரிக்கக் கூடாது” என்று அவர் குறிப்பிட்டார்.

நீதிபதிகளின் அதிரடி உத்தரவு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டது. “சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தால், நீங்கள் முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தையோ அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயத்தையோதான் அணுகியிருக்க வேண்டும். அதை விடுத்து நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இருப்பினும், மனுதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை சென்னை உயர் நீதிமன்றம் அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முன்வைக்கலாம் என்றும், அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அமைப்புகள் விரைவாக விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள், கட்டுமான நிறுவனங்களின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

MUST READ