தமிழக அரசியலில் சுமார் ஆறு தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக – அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் பதவியேற்றார்.
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10:00 மணியளவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்கு பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” என அவர் தனது உரையைத் தொடங்கியபோது, அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கரவொலி எழுந்தது.
நடந்து முடிந்த 2024 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் , 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ் மற்றும் இதர தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
அமைச்சரவையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் முக்கியப் பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.
