Homeசெய்திகள்தமிழ்நாடுவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது... இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது… இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

-

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

இதேபோல், நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

MUST READ