ஆவின் பால் விற்பனை நாளொன்றிற்கு 29.13 லட்சம் லிட்டராக அதிகரிப்பு
ஆவின் பால் விற்பனை நாளொன்றிற்கு 29.13 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளதாக பால்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பிற தனியார் நிறுவனங்களின் விலையோடு ஒப்பிடுகையில், மலிவு விலையில் பொது மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும், ஆவின் பால் விற்பனை அளவு அதிகரித்து வருகிறது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் விற்பனை அளவு 10.3% அதிகரித்து நாளொன்றுக்கு 26.41 லட்சம் லிட்டரில் இருந்து 29.13 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆவின் பால் பொருட்களின் விற்பனை அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு சதவீதம் அதிகரித்து ரூ.553.62 கோடியிலிருந்து ரூ.574.5 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், ஆவின் நிறுவனம் மாறிவரும் நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப தொடர்ந்து புதிய பால் பொருட்களை சந்தைப்படுத்துவது மூலம் விற்பனை அளவை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சாதனை அளவாக ரூபாய் 116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
