தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, துணை முதலமைச்சராக நியமித்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். இதனை அடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் , நடிகர் ரஜினிகாந்த் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், நடிகர் சத்யராஜ், துணை முதலமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதனிடையே, நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில், இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும், தமிழ்நாட்டை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்கவும் வாழ்த்துகள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.