செந்தில்பாலாஜிக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம்- ஜெயக்குமார்
அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
“2016 தலைமைச் செயலாளர் அறையில் நடந்த அமலாக்கத்துறை சோதனைக்கும், இன்றைய சோதனைக்கு வித்தியாசமே இல்லை என மா.சுப்பிரமணியன் சொல்கிறார். அன்று சட்டம் தன் கடமையை செய்கிறது என்ற ஸ்டாலின், இன்று அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார். அதிமுக அரசு சட்ட நடவடிக்கை எடுத்தது. செந்தில் பாலாஜி போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தபோது நடந்த ஊழல் என மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தவறு நடந்தது தெரிந்ததும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். புகார் பெற்று சட்ட நடவடிக்கைக்கும் உத்தரவிட்டார். செந்தில் பாலாஜிக்கு அதன்பிறகு அமைச்சர் பதவியை ஜெயலலிதா தரவில்லை. செந்தில் பாலாஜி தன் குடும்பத்திற்கு விஸ்வாசமாக உள்ளதால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தது ஸ்டாலின் தான்.
முந்தைய காங்கிரஸ் அரசு கனிமொழி, ராஜாவை 2ஜி வழக்கில் கைது செய்தபோது அமைதியாக இருந்த திமுக, இப்போது ஊழல் அமைச்சர் கைதான உடன் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை மருத்துவமனையை சுற்றி வருகிறார்கள், சிக்கி கொள்வோமோ என்று அஞ்சுகிறார்கள். ஊழலுக்கு பெயர்போன கட்சிதான் திமுக. ஊழலை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த தகுதியும் அருகதையும் இல்லை. தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களை யாருமே சென்று பார்க்க முடியாத நிலையில் செந்தில்பாலாஜியை ஸ்டாலின் எப்படி பார்த்தார்? நடிப்பிற்கான சிறந்த ஆஸ்கர் விருது அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்கலாம். 30% அடைப்புக்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான். இன்றைக்கு தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.