அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி- செல்லூர் ராஜூ
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “எடப்பாடி அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை என செல்லூர் ராஜூ பேட்டியளித்த விவகாரத்தில் யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது” எனக் கூறியிருந்தார்.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “கட்சியில் சேர்ந்து ஓராண்டிலேயே தலைவரான அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி என்பது எல்லாருக்கும் தெரியும். நான் ஆரம்பத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்து வட்ட செயலாளர், பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர், கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர் என படிப்படிப்பாக உயர்ந்து தற்போது அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ளேன். 40 ஆண்டுகளுக்கும் மேல் பொது வாழ்வில் இருக்கிறேன். என்னை பற்றியும், நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் மதுரை மக்களுக்குக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் நன்றாக தெரியும்.
அதிமுகவினர் மீது துரும்பை எறிந்தால் கூட பதிலுக்கு இரும்பை வீசுவோம். அரசியல் விஞ்ஞானிகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்ற அண்ணாமலை என்னை விமர்சிக்கிறார். அதிமுகவை விமர்சிப்பவர்கள், தமிழ்நாடு அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும். அண்ணாமலையின் கருத்துகளை பொருட்படுத்துவதில்லை. தமிழ்நாட்டில் 2 கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுக” என்றார்.