Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி வரும் 21-ல் அதிமுக போராட்டம்

செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி வரும் 21-ல் அதிமுக போராட்டம்

-

செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி வரும் 21-ல் அதிமுக போராட்டம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுக சார்பில் வரும் 21ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

eps mkstalin

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக என்றாலே அதிகார துஷ்பிரயோகம், ஊழல், கட்டப் பஞ்சாயத்து, வன்முறை, நில அபகரிப்பு, வியாபாரிகள் மற்றும் தொழில் செய்பவர்கள் உள்ளிட்டோரை மிரட்டுவது மற்றும் கொடுமைப்படுத்துவது முதலான பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தான் மக்கள் அனைவருக்கும் நினைவில் வருகிறது. 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு வகைகளில் விஞ்ஞான ரீதியாக ஊழல்களைப் புரிந்து மக்கள் விரோத அரசாக இருந்து வருகிறது.

விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை சிறிதும் கண்டுகொள்ளாமல், தன் குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, குடிநீர், கழிவு நீர் இணைப்பு முதலானவற்றின் கட்டணங்களை உயர்த்தி மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குக் கூட மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அதே போல், தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இவை அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

EPS - எடப்பாடி பழனிசாமி

திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுடைய குடும்பம் வளம்பெற வேண்டும் என்பதற்காக, விடியா திமுக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பதவியில் இருந்த செந்தில்பாலாஜி பல்வேறு வகைகளில் ஊழல் முறைகேடுகள் செய்துள்ளதை மக்கள் அனைவரும் கண்கூடாகப் பார்க்கின்றனர். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றுக்கொண்டு அப்பாவி இளைஞர்களை ஏமாற்றிய வழக்கில் அமலாக்கத் துறையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரது செயலால் தமிழ் நாட்டிற்கு மிகுந்த அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ள செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று, நேற்று (15.06.2023) மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டது.

சட்டம்-ஒழுங்கை சிறிதும் மதிக்காமல் இருந்து வரும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துவிட்டு வந்துள்ளார். இச்செயல் மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் திரு. ஸ்டாலின், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து இதுவரை நீக்காதது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

Senthil balaji

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும்; லஞ்ச வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 21.06.2023 – புதன் கிழமை காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்களும், நிர்வாகிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

விடியா திமுக ஆட்சியைக் கண்டித்தும், மக்கள் நலனை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும்; கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், விடியா திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ