Homeசெய்திகள்தமிழ்நாடு10 நாட்களில் 2-வது தற்கொலை! நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

10 நாட்களில் 2-வது தற்கொலை! நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

-

10 நாட்களில் 2-வது தற்கொலை! நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

நீட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Anbumani Ramadoss

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக நெய்வேலியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட்டுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தைச் சேர்ந்த என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளியான உத்திராபதியின் மகள் நிஷா, கடந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வை எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. நடப்பாண்டில் மீண்டும் நீட் தேர்வு எழுதும் நோக்கத்துடன், நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட மாதிரி தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனம் உடைந்த நிஷா, நேற்று வடலூரில் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். நிஷாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிஷாவின் தற்கொலை, நீட் தேர்வு தோல்வி அச்சம் காரணமாக நடப்பாண்டில் நிகழ்ந்துள்ள இரண்டாவது தற்கொலை ஆகும். கடந்த மார்ச் 27-ஆம் நாள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மாபாளையத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வந்த சந்துரு என்ற மாணவர், நீட் தோல்வி அச்சத்தால் பயிற்சி மையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 10 நாட்களில் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதிலிருந்தே, நீட் தேர்வு இன்னும் உயிர்க்கொல்லியாக தொடருவதை உணர முடியும். உயிர்க்கொல்லியை கொல்வது தான் மாணவர்களை காப்பதற்கு சிறந்த வழியாகும்.

2017-ஆம் ஆண்டில் நீட் நடைமுறைக்கு வந்த பின்னர், அதை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக 2017-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்ட முன்வரைவு மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டு விட்ட நிலையில், 2021 செப்டம்பரில் மீண்டும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதை ஆளுனரே திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் அதே சட்டம் மீண்டும் இயற்றி, மே மாதத் தொடக்கத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 14 மாதங்கள் நிறைவடைந்து விட்டன; அந்த சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு ஓராண்டு நிறைவடையப் போகிறது. ஆனால், நீட் விலக்கு சட்டத்திற்கு இன்று வரையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது சமூக அநீதி.

நீட்விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு ஓராண்டுக்கும் கூடுதலான காலத்தை எடுத்துக் கொள்வதற்கு எந்தத் தேவையும் இல்லை. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவு குறித்து கடந்த கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மத்திய அரசு விளக்கம் கோரியது. அதற்கு அடுத்த சில வாரங்களில் தமிழக அரசு விளக்கமளித்து விட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய அரசு இரண்டாவது முறையாக விளக்கம் கோரியது. அதற்கு விடை தயாரிக்கப்பட்டு வருவதாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு தெரிவித்தது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசிடமிருந்தோ, மாநில அரசிடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை. அதேநேரத்தில் 2023-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே 7-ஆம் நாள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் மாணவ, மாணவியரிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

2006ஆம் ஆண்டில் தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து தொழில் படிப்புகளுக்குமான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வதற்கான சட்டம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட போது சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்தேன். அப்போது சுகாதாரம், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளின் கருத்துகள் கேட்கப்பட்டு, தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்ட நாளில் இருந்து 83 நாட்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், இப்போது நீட் விலக்கு சட்டம் முதலில் நிறைவேற்றப்பட்டு 571 நாட்களும், இரண்டாவதாக நிறைவேற்றப்பட்டு 423 நாட்களும் நிறைவடைந்து விட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இது அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத செயலாகும்.

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதலை விரைவாகப் பெறுவதற்கு மத்திய அரசிற்கு தமிழ்நாடு அரசும் எந்த வகையிலும் அழுத்தம் தரவில்லை. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறும் விவகாரத்தில் செய்யப்படும் தாமதம் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் உருவாக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்திற்கு நடப்பாண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்பாக ஒப்புதல் பெற வேண்டும். மத்திய அரசும் இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதேநேரத்தில் மருத்துவப் படிப்பை விட மனித உயிர் மேலானது என்பதால், நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ