மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆளும் திமுக தலைமை திடீரென அறிவித்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், திமுகவின் இந்த அதிரடி நகர்வு தேர்தல் களம், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தனது குறுத்துக்களை முன்வைத்துள்ளாா். 
திமுகவின் அதிரடி வேட்பாளர் அறிவிப்பும் பின்னணியும்
நடப்பு இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்றே பல அரசியல் ஆய்வாளர்களும் எதிர்பார்த்திருந்த சூழலில், அதற்கு மாறாக மதுராந்தகம் தொகுதிக்கு வழக்கறிஞர் ஐ. பரந்தாமன், தாராபுரம் தொகுதிக்கு வழக்கறிஞர் எஸ். சுகன்யா என இரு புதிய முகங்களை வேட்பாளர்களாகத் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் தவெக தலைவர் விஜய்யின் பேச்சு மற்றும் அவரது அணுகுமுறை திமுக தலைமையைக் கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கியதன் வெளிப்பாடே இந்தத் தேர்தல் முடிவாகும். களத்தை விட்டு ஒதுங்காமல், ‘வாழ்வா சாவா’ என்ற மனநிலையுடன் நேரடியாகப் களமிறங்கி, மும்முனைப் போட்டியை திமுக உறுதி செய்துள்ளது. திமுக சார்பில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே தாராபுரம் மற்றும் கொங்கு மண்டல களப்பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், மற்ற கட்சிகளை விட திமுக முந்திக்கொண்டு தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சந்திக்கும் சவால்கள்
திமுக தனது வேட்பாளர்களை விரைவாக அறிவித்துவிட்ட நிலையில், தவெக தரப்பில் வேட்பாளர்களைத் தேர்வு செய்து அறிவிப்பதில் தாமதம் நிலவி வருகிறது. ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்து பதவி துறந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கே மீண்டும் வாய்ப்பு தருவதா அல்லது புதிய வேட்பாளர்களைக் களமிறக்குவதா என்ற குழப்பம் அக் கட்சிக்குள் நீடிக்கிறது.
மேலும், தவெக அரசு மீதான மின்வெட்டுப் புகார்கள், தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாதது போன்ற விமர்சனங்களும், பதவி விலகிச் சென்றவர்கள் மீது மக்களிடையே நிலவும் அதிருப்தியும் இத்தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ஆக்கப்பூர்வமான அரசியல் அணுகுமுறையைக் கையாளாமல் வெறும் திமுக எதிர்ப்பை மட்டுமே முதன்மைப்படுத்துவது நீண்டகால அடிப்படையில் கட்சிக்குப் பலன் தராது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
தடுமாற்றத்தில் அதிமுக
இழந்த தன் சொந்தத் தொகுதிகளை மீண்டும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அதிமுகவுக்கு இத்தேர்தல் ஒரு வாழ்வா சாவா போராட்டமாகும். இருப்பினும், உட்கட்சிப் பூசல்கள், செங்கோட்டையன் போன்ற மூத்த நிர்வாகிகளின் விலகல் மற்றும் கொங்கு மண்டல நிர்வாகிகளிடையே நிலவும் அதிருப்தி ஆகியவற்றால் அதிமுக கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாஜக மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரிடம் அதிமுக ஆதரவு கோரினாலும், வேட்பாளர் தேர்வில் நிலவும் தாமதம் மற்றும் களப்பணி தொய்வு காரணமாக அதிமுக தற்போது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் ஆபத்தான சூழலே நிலவுகிறது.
கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு
இடதுசாரிகள் (சிபிஎம் / சிபிஐ): தவெக கூட்டணியில் தாங்கள் அங்கமாக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கவோ அல்லது தனித்துப் போட்டியிடவோ வாய்ப்புகள் அதிகம்.
விசிக மற்றும் தோழமைக் கட்சிகள்: திருமாவளவன், வைகோ, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவளிக்க வேண்டிய அரசியல் சூழலில் உள்ளன. இருப்பினும், சட்டமன்றத்தில் தவெகவின் சமீபத்திய செயல்பாடுகளை எதிர்கொண்டு, களத்தில் இறங்கி தவெக வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்வது விசிக தலைவர் திருமாவளவனுக்குக் கடுமையான அரசியல் சங்கடத்தை உருவாக்கும்.
மேலும், தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வேட்பாளர்களை முதன்முதலாக அறிவித்து தேர்தல் பணிகளிலும் பிரச்சாரப் வியூகங்களிலும் திமுக தற்போது முதலிடத்தில் முந்தியுள்ளது. தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அறிவிக்கும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் களப்பணிகளே இத்தேர்தலின் இறுதி முடிவை முழுமையாகத் தீர்மானிக்கும்.
திமுக எதிர்ப்பு மட்டுமே டானிக்! – விஜய் அமைச்சரவை மீது பத்திரிகையாளர் கோடீஸ்வரன் காரசார விமர்சனம்!
