பாஜக – அதிமுக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

சென்னை சத்யமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “பாஜக – அதிமுக கூட்டணிக்கு மக்கள் கெடு கொடுத்துள்ளனர். இதை பார்த்துக்கொண்டிருந்த டிடிவி தினகரன் வெளியே வந்துவிட்டார்; ஓ.பன்னீர்செல்வமும் வெளியே வந்துவிட்டார். இன்னும் யாரெல்லாம் வெளியே வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்தக் கூட்டணி ஒரு மூழ்குகின்ற கப்பல்; அதில் ஏறினால் மூழ்கி விடுவோம் என்று ஒவ்வொருவராக ஒவ்வொரு காரணத்தை சொல்லி வெளியே வருகிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பாஜக., அதிமுக கூட்டணியை ஏற்கமாட்டார்கள். அது எதார்த்தமான உண்மை. இதை புரிந்துகொண்டதால் தான் டிடிவி தினகரன் வெளியேறினார். இன்று செங்கோட்டையன் வெளியே வந்துள்ளார். ஆகையால் மக்கள் இவர்களுக்கு கெடு கொடுத்துவிட்டனர். இது மூழ்குகின்ற கப்பல்; இதில் ஏறவும் வேண்டாம், இறங்கவும் வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்.
உறவாடி கெடுக்கும் ஒரு கட்சிதான் பாஜக. இதற்கு பல சம்பங்கள் உதாரணமாக இருக்கு. எல்லா மாநிலங்களிலும் அவர்களது சித்து விளையாட்டை நடத்தியுள்ளனர். இப்போது உட்சபட்சமாக அதிமுகவில் அவர்களது சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளார்கள். ஆகவே அதிமுக-தான் இனி விழித்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.