
எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தபோதிலும் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தமிழக மக்களின் வாக்குரிமையை பற்றிக்கும் சதித்திட்டம் என திமுக தொடர்ந்து எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகிறது. காரணம், வாக்காளர் பட்டியலுக்கு சமர்பிக்கப்படும் ஆவணங்களில் ஆதார் அட்டையை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் குடும்ப அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க வேண்டும் என்கிற எதிர்கட்சிகளின் கோரிக்கையையும் தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மூலம் தமிழகத்தில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்கிறது. ஆனால், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது என்னென்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தனக்கு ஆதரவாக இருக்க கூடிய வாக்குகளை வைத்துக்கொண்டு, எதிரான வாக்குகளை நீக்க பாஜக திட்டமிட்டு உள்ளது. எனினும் , தமிழகத்தில் அக்கட்சியின் முயற்சி வெற்றி பெறாது” என்று கூறியுள்ளார்.


