இன்று நள்ளிரவு முதல் கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் அனைத்து துறைமுக ட்ரைலர் லாரி ஒப்பந்ததாரர் நல கூட்டமைப்பு அறிவித்தனர்.
வாடகை உயர்வு அளிப்பதாக பேச்சுவார்த்தை உடன்படிக்கை ஏற்பட்டு ஆறு மாத காலமாகியும் வாடகை உயர்வு வழங்காததால் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர்.
சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்காக இயக்கப்படும் கண்டெய்னர் லாரிகள் வாடகையை உயர்வு கோரி இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அனைத்து துறைமுக ஒப்பந்ததாரர் ட்ரெய்லர் நல கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
2014க்கு பிறகு 8 ஆண்டுகளாக முறையான வாடகை கொடுக்கப்படவில்லை. 2014 இல் 50 ரூபாய் இருந்த டீசல் இன்று 99 ரூபாயாக தற்போது உள்ளது. அதேபோல 9000 ரூபாயாக இருந்த டயர் விலை தற்போது 23 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. மேலும் இன்ஷூரன்ஸ் 7000 த்தில் இருந்தது தற்போது 50 ஆயிரம் ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. லாரிகளின் எப்சிக்கு 55 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று 2 லட்சம் செலவாகிறது என்று பல குற்றச்சாட்டை முன்வைத்து வாடகை உயர்வு கோரி கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி சங்கங்கள் இணைந்து 6000 லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து ஜூலை மாதம் ஏழாம் தேதி சென்னை துறைமுக அலுவலகத்தில் ட்ரைலர் லாரி உரிமையாளர்கள் மற்றும் துறைமுக அதிகாரிகள் வட்டாட்சியர் வருவாய் கோட்டாட்சியர் காவல் துணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கஸ்டமர் ஹவுஸ் ஏஜென்ட் எனப்படும் சி.ஹெச்.ஏ கண்டெய்னர் ஃபைரைட் ஸ்டேஷன் எனப்படும் CFS உள்ளிட்ட ஒட்டு மொத்த டிரேட் யூனியனுக்கும் சேர்ந்து வாடகை ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
CFS, CHS, NACFS உள்ளிட்ட துறைமுக ஏஜென்சிகள் 80 சதவீதம் வாடகையில் 25 சதவீதம் உயர்த்தி தருவதாக உறுதி அளித்தனர்
மேலும் காலியான கண்டைனர் பெட்டகங்களை உள்ளே ஏற்றுவதற்கு வாங்கப்படும் தொகைகள் வாங்கப்பட மாட்டாது என உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிந்து ஆறு மாத காலமாகியும் வாடகை உயர்வு ஏற்றி தரவில்லை என லாரி ட்ரைலர் உரிமையாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டு வைத்தனர்.
மேலும் இது குறித்து கேட்டதற்கு தமிழக அரசாங்க ஊழியர்கள் சென்னை துறைமுக விஷயத்தில் எப்படி தலையிடலாம் என்ற கேள்வி எழுப்பி அவர்கள் பேச்சு வார்த்தை செல்லாது என்று கூறி அவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
ஆகையால் அறிவித்தபடி வாடகை உயர்வை அளிக்க வலியுறுத்தி 12 சங்கங்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் இன்று நள்ளிரவு முதல் கண்டெய்னர் லாரிகள் இயக்கப்படாது என தெரிவித்துள்ளனர். இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தங்களது வாகனத்தை நிறுத்துமிடத்திலே நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் வேலை நிறுத்தத்தில் உடன்பாடு இல்லாத எதிர் தரப்பு சங்கத்தினர் காவல்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளனர்.
ஐந்தாயிரம் லாரிகள் வைத்திருக்கும் நாங்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னை தண்டையார்பேட்டை காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
சென்னை காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடரும் என கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பு சங்கத்தினரும் ஒற்றுமை இல்லாமல் போட்டி போட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக ஒரு தரப்பினரும் லாரிகளை இயக்கப் போவதாக ஒரு தரப்பினரும் அறிவித்துள்ளது லாரி ஓட்டுனர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.