நதிகள் இணைப்பு, காவிரியைக் கூவம் திட்டத்தைச் செயல்படுத்தச் சௌமியா அன்புமணி வலியுறுத்தல்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நதிகள் இணைப்பு குறித்துப் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார்.

“சென்னையில் ஓடும் கூவம் ஆறு ஒரு அதிசயம்”:
விவாதத்தில் பேசிய சௌமியா அன்புமணி, கூவம் ஆற்றின் தற்போதைய நிலை குறித்துக் கவலை தெரிவித்தார்.
“கூவம் ஆறு திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் இடத்தில் இன்றளவும் சுத்தமாகவும், மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் உள்ளது. ஆனால், அது சென்னை நகருக்குள் நுழைந்த பிறகுதான் கழிவுநீராகவும் சாக்கடையாகவும் மாறுகிறது. உண்மையில் சென்னையில் ஓடும் கூவம் ஆறு ஒரு இயற்கை அதிசயம்; அதனைப் மீட்டெடுக்க வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், அரசு அலுவலகங்கள் பல இடங்களில் நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்படுவதாகவும், இதைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தாமிரபரணியில் குப்பைகள் — பாலாற்றில் தடுப்பணைகள்:
தென் தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், தாமிரபரணியைத் தூய்மைப்படுத்த உடனடியாகச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், வட தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பாலாற்றில் கூடுதல் தடுப்பணைகளைக் கட்டி நிலத்தடி நீர்மட்டத்தைப் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காவிரி – குண்டாறு திட்டம் & நதிகள் இணைப்பு:
தமிழ்நாட்டில் நீர்வள மேலாண்மையை வலுப்படுத்த நதிகள் இணைப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசிய அவர்:
காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்:
கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, நீண்ட காலமாக நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்டுள்ள காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாகத் தீவிரப்படுத்தி நிறைவேற்ற வேண்டும்.
நந்தன் கால்வாய் திட்டம்:
விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டத்தைச் சாத்தியப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பதன் மூலமே வறட்சியையும் வெள்ளப் பெருக்கையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த முடியும் எனத் தன் உரையில் சௌமியா அன்புமணி சுட்டிக்காட்டினார்.
“ஆட்சிக்கு வந்த 5-வது நாளே தாண்டிக்குடியில் சாலை அமைக்க உத்தரவிட்டார் முதலமைச்சர் விஜய்!”
