குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 நிச்சயம் உண்டு- துரைமுருகன்
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னை ஆற்றில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரூ.19.46 கோடி மதிப்பில் பொன்னை அணைக்கட்டு புனரமைப்பு பணிகள் மற்றும் மேல்பாடி கிராமம் அருகே பொன்னையாற்றின் குறுக்கே ரூ.12.94 கோடி மதிப்பில் தரைப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், “தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டி இருக்கிறது. பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கண்டிப்பாக வழங்கப்படும். உங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கிகள் அனைத்தும் செட்டில் செய்து விட்டு தான் அடுத்த தேர்தலில் வாக்குகள் கேட்க வருவோம். தாயின் மடியாக காட்பாடி தொகுதியை பார்க்கிறேன். வரும் நிதி நிலை அறிக்கையில் காட்பாடி தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
பெண்கள் தற்போது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதால் தான் குழந்தைகள் மேல் பாசமாக இருப்பதில்லை. நான் சவால் விடுகிறேன்… கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக பணிகள் நடைபெற்ற தொகுதி காட்பாடியில் தான்… தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி அனுப்பினால் அதனை அவர் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பதே விதி”என்றார்.