12 மணி நேர வேலை மசோதாவை ஆளுநரில் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து, அதனைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023-ஐ – குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. நாடு முழுவதும் தொழிலாளர்களும், தொமுச, ஏஐடியூசி, சிஐடியூ எச்எம்எஸ், உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் தெரிவித்த கடுமையான எதிர்ப்பை நிராகரித்து, பாஜக ஒன்றிய அரசு கடந்த 2020-ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தொழிலாளர் விரோத சட்டத்தின் நீட்சியாகவே தமிழ்நாடு திருத்தச் சட்டம் அமைந்துள்ளது.
தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்ட முன்வடிவு அறிமுக நிலையிலேயே எதிர்ப்பும், ஆட்சேபனையும் தெரிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் தலையிட்டு சட்ட முன்வடிவை தடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி என்பதிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தியும், மிகை வேலை பார்க்கும் நேரத்தை அதிகரித்தும், வேலை அளிப்பவர் விருப்பம் போல் வேலைச் சுமையை ஏற்றவும் வழிவகை செய்யும் சட்டம் பேரவையில் வலுவான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர் உணர்வுகளுக்கும், உரிமைக்கும் எதிரானது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கதவுகளை மூடுவதாகும்.
உலகத் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை உரிமைப் போராட்டத்தை தொடங்கிய மே நாள் நெருங்கிய நேரத்தில், அவர்களது உரிமை மறுக்கப்படுவதும், அதுவும் தொழிலாளர்களின் உணர்வை போற்றிப் பாராட்டி, மே தின நினைவு சின்னம் அமைத்த தலைவர் கருணாநிதி வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டில் மே தினம் கொண்டாடிய வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு அரசே கொண்டாட வேண்டிய நேரத்தில், அன்னிய நாட்டு முதலீட்டை காரணம் காட்டி தொழிலாளர் வேலை நேரத்தை அதிகரிப்பது எந்த வகையிலும் ஏற்கதக்கதல்ல.
இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் அளித்துள்ள விளக்கம் தொழிலாளர்களை குழப்பும் நோக்கம் கொண்டதாகும். இச்சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. பேரவையில் நிறைவேற்றிய தொழிற்சாலைகள் திருத்தச் சட்டத்தை ஆளுநரில் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து, அதனைத் திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முதல்வரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. ” என்று குறிப்பிட்டுள்ளார்.