நீட் தேர்வுக்கு எதிராகத் தேசிய அளவில் வெடித்துள்ள மாணவர்களின் போராட்ட உணர்வை ஒன்றிய பாஜக அரசு இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.
மாணவர் போராட்டமும் ஒன்றிய அரசின் அணுகுமுறையும்
”கல்விக்காகவும், தங்களது தலைமுறை கனவுக்காகவும் இளைஞர்களும் மாணவர்களும் வீதியில் இறங்கி வீரியமிக்க போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது ஒரு வெகுமக்கள் இயக்கம். டெல்லியில் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தை ஒன்றிய பாஜக அரசு மிகவும் மோசமாகக் கையாண்டு, மாணவர்களைப் பலவந்தமாக ஒடுக்கியுள்ளது. இப்போராட்டத்தின் மாண்பையும், இதன் ஆழத்தையும் ஒன்றிய அரசு இன்னும் சரியாக உள்வாங்கிக் கொள்ள மறுக்கிறது.”

தமிழ்நாடு அரசின் அணுகுமுறைக்குக் கண்டனம்
தமிழ்நாடு அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விமர்சித்த அவர், ”நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்துப் போராடிய வரலாற்றுப் பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு. சட்டமன்றத்தில் பாஜகவைத் தவிர்த்து மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் (230 உறுப்பினர்கள்) நீட் தேர்வுக்கு எதிராக ஒரே குரலில் நின்று மசோதா நிறைவேற்றியுள்ளோம்.
அப்படிப்பட்ட சூழலில், மாணவர்கள் போராடும் போது அமைச்சர்கள் ‘சாலை போராட்டம் நடத்துவதற்கான இடம் அல்ல’ என்று பேசுவதும், மற்றொரு பக்கம் ‘ஜனநாயகன்’ திரைப்படக் கொண்டாட்டங்களில் மூழ்கியிருப்பதும் துரதிர்ஷ்டவசமானது. தமிழ்நாடு அரசு பட்டும் படாமலும் வெளிப்படுவதைத் தவிர்த்து, மாணவர் போராட்டத்திற்கு வீதிக்கு வீதி முழு ஆதரவை வழங்க வேண்டும்.”
பாஜக எதிர்ப்பில் தயக்கம் வேண்டாம்
”பாஜகவை எதிர்ப்பதில் தமிழ்நாடு அரசு எவ்விதத் தயக்கமும் காட்டக் கூடாது. பாஜக எதிர்ப்பில் யார் யாரெல்லாம் தயக்கம் காட்டினார்களோ, அவர்களைத் தமிழ்நாடு மக்கள் எந்த இடத்தில் வைத்தார்கள் என்ற வரலாறு அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியது தனிப்பட்ட ஒரு கட்சியின் கொள்கை அல்ல; அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கொள்கை. எனவே, மாநில அரசு தனது அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கும் குடியரசுத் தலைவருக்கும் தொடர்ந்து வழங்க வேண்டும்.”
தேசிய அளவில் எதிரொலிக்கும் நீட் எதிர்ப்பு
”ஒரு காலத்தில் நீட் தேர்வை எதிர்த்துத் தமிழ்நாடு மட்டுமே தனித்துக் குரல் கொடுத்து வந்தது. ஆனால் இன்றைக்கு இந்தியாவின் அனைத்து மாநில மாணவர்களும் நீட்டுக்கு எதிராக ஒன்றுதிரண்டுள்ளனர். இந்த எழுச்சி நிச்சயமாக நீட் தேர்வு ரத்தாவதற்கான நல்வழியை அமைக்கும்,” என்று ஆளூர் ஷானவாஸ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
