அதிமுக யாருக்கும் அடிமையில்லை; திமுகதான் அடிமை- எடப்பாடி பழனிசாமி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்றார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கோடநாடு வழக்கில் திமுக திட்டமிட்டு அவதூறு பரப்புகிறது. கோடநாடு விவகாரத்தை மட்டும் மையமாக வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவது ஏன்? கோடநாடு வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது…? கோடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய போது பதிலளிக்காதது ஏன்? கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுகவினர் வாதாடுகின்றனர். காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு தீர்வு காண முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், எப்படி இந்தியாவை காப்பாற்ற முடியும். திமுகவிற்கு தமிழ்நாட்டு மக்களை பற்றி கவலையில்லை. அதிகாரம் மட்டுமே ஸ்டாலினுக்கு தேவை.
டெல்டாவில் நெற்பயிர்கள் கருகி கொண்டிருக்கின்றன. அதற்கு திமுக அரசிடம் என்ன தீர்வு உள்ளது?கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. தமிழக உரிமையை அதிமுக நாடாளுமன்றத்தில் நிலைநாட்டியது. காவிரி நீர் உரிமையை பெற 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவிற்கு அதிமுக செயல்பட்டது. அதிமுக ஒருபோதும் யாருக்கும் அடிமை இல்லை. குடும்பத்திற்காக மட்டுமே செயல்படும் திமுகதான் அடிமை. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என அறிவித்துவிட்டு தற்போது திமுக கதை கட்டிவருகிறது. நீட் எனும் அரக்கனை கொண்டுவந்தது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுகதான்” எனக் குற்றஞ்சாட்டினார்.