நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தேர்தல் ஆணையத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக வி.சாலை பகுதியில் பிரம்மாண்ட மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடி கம்பமும் நடப்பட்டுள்ளது. இந்த கொடி கம்பம் 10 ஆண்டுகளுக்கு அகற்றப்படாமல் இருக்கும் விதமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது
மேலும் மாநாட்டு மேடையில் தமிழ்த்தாய், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், பெரும்பிடுகு முத்தரையர் உள்ளிட்டோரது படங்களும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகம் அடங்கிய பிரம்மாண்ட பதாகைகளும் வைக்கப்பட்டு உள்ளனர். மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் 5,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தேர்தல் ஆணையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் இடம்பெற்றுள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்கு பின்னர் புதிததாக பதிவு செய்யப்பட்ட 39 கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் கிழக்கு கடற்கரை சாலை , பனையூர் என்ற முகவரியில் விஜயின் த.வெ .க. பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.