இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் எப்போதும் தவறாமல் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சேலம் மாவட்டம் சுக்கம்பட்டியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் கேட்டு மிகுந்த துயருற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் எப்போதும் தவறாமல் தலைக்கவசம் அணிந்து, உரிய சாலை விதிமுறைகளை கவனமாகப் பின்பற்றி, பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.