
வணிக எரிவாயு (LPG) சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் செய்திகளுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) விளக்கம் அளித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் உலகளவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 60 வரையிலும், வணிக ரீதியிலான சிலிண்டர் விலை ரூ. 115 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விநியோகம் பல்வேறு மாநிலங்களில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஸ்டார் ஹோட்டல்கள் முதல் சிறு சிறு தேநீர் கடைகள் வரை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாட்டைக் குறைக்க மத்திய அரசு சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகமும் இன்னும் ஒரிரு நாட்களில் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தட்டுப்பாட்டைக் குறைக்க மத்திய அரசு சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரித்துள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விநியோகமும் தாமதமாவதால் பொதுமக்கள் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர்களுக்கு (19 கிலோ) கடும் தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்துள்ள புகார்களுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (BPCL) முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எரிவாயு இருப்பு போதுமான அளவில் உள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்றும் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த தொடர்பாக BPCL நிறுவனம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில்,
நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு இன்றி கிடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. விநியோகச் சங்கிலியில் எந்தத் தடங்கலும் இல்லை என தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் “சிலிண்டர் தட்டுப்பாடு” குறித்த செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் உள்நோக்கம் கொண்டவை என்றும், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் எரிவாயு சிலிண்டர்கள் மருத்துவம், கல்வி போன்றவற்றிற்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் வழங்குவதற்கான வழிமுறை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
