சென்னையை சேர்ந்த நபரிடம் FedEx கூரியர் மூலம் ரூ.1.18 கோடி மோசடி செய்த வழக்கில் மகாராஷ்டிராவை சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று சென்னையைச் சேர்ந்த நபருக்கு, பெடெக்ஸ் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி என்று போலி நபரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் பாதிக்கபட்டவர் பெயரில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ள பார்சல் வந்துள்ளதாக சொல்லி அந்த அழைப்பை மும்பை சைபர் கிரைம் அதிகாரி ஒருவருக்கு மாற்றியுள்ளார். அந்த போலி சைபர் கிரைம் அதிகாரி நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க தாங்கள் அனுப்பும் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டும், இல்லாவிட்டால் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார். இதனால் அந்த நபர் பல வங்கி கணக்குகளுக்கு ரூ. 1,18,00,000 பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சென்னை சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.

அதன் பேரில் சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் குஜராத்தை சேர்ந்த மோசடி வங்கி கணக்கு துவங்கிய ரமேஷ்பாய் பதபாய் போக்ரா, சைபர் கிரிமினல் நெட் வொர்க்கின் முகவர்களாக மகாராஷ்டிராவை மையமாக கொண்டு செயல்பட்ட விவேக் பெலாடியா தமாஜ்பாய், பரேஷ் நரஷிபாய் கல்சாரியா ஆகியோரை கைது செய்தனர். மேலும் முகவர்களுக்கும், சைபர் குற்றவாளிகளுக்கும் இடைதரகராக செயல்பட்ட குஜராத்தின் கச் மாவட்டத்தைச் சேர்ந்த விபுல் பாகுபாய் கோவதியா என்பவரும் கைது செய்யபட்டார்.
இந்த நிலையில், சைபர் குற்றப் பிரிவு போலீசார் மேம்பட்ட புலனாய்வு தொழில் நுட்பங்கள் மற்றும் பகுப்பாய்வு முறைகளை பயன்படுத்தி மோசடி கும்பலின் முக்கிய குற்றவாளிகளான மகாராஷ்டிரா மாநிலம் குர்துவாடியை சேர்ந்த சாஹில் மற்றும் ஷாருக்காவைக் தற்போது கைது செய்துள்ளனர். சாஹில் OTP APK File-களை வங்கி கணக்கு வைத்திருக்கும் நபரின் செல்போனில் பதிவேற்றம் செய்து இயக்கி மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் செய்ய உறுதுணையாக இருந்து உள்ளார். ஷாருக்கா அவருக்கு உதவியாக இருந்துள்ளார். இந்த ஒட்டுமொத்த மோசடியும் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து முக்கிய குற்றவாளிகள் மூலம் இயக்கி செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சாஹில், ஷாருக்கா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.