Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோட்டில் உள்ள பழங்குடியினர் தொழிற்சாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

ஈரோட்டில் உள்ள பழங்குடியினர் தொழிற்சாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

-

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பட்டியலின மக்களுக்காக கட்டப்பட்டு, 28 ஆண்டுகளாக  பூட்டிக்கிடக்கும் 200 தொழிற்கூடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோட்டில் உள்ள பழங்குடியினர் தொழிற்சாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கைஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வேட்டுவபாளையம், ஈங்கூர், கடப்பமடை, கூத்தம்பாளையம், எழுதிங்கள்பட்டி, செங்குளம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி ஆசிய அளவில் மிகப்பெரும் தொழிற்பேட்டைகளில் ஒன்றான சிப்காட் தொழில் மையம் 2700 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. இங்கு பட்டியலின மக்கள் தொழில் தொடங்க 150 ஏக்கர் நிலம் தாட்கோவிற்கு ஒதுக்கப்பட்டு, 200 பின்னலாடை நிறுவனங்கள் அமைக்க கட்டடங்கள் கட்டப்பட்டன. 1996 ஆம் ஆண்டு ரூ. 22.41 கோடி மதிப்பில் தொழிற்கூடங்கள், கழிவு நீர் திட்டங்கள், சாலைகள், அலுவலக கட்டடம், ஆழ்குழாய் கிணறு, மேல்நிலை தொட்டி, தெரு விளக்குகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன.

2 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட ஒவ்வொரு தொழிற்கூடத்திலும் பின்னலாடை நிறுவனம் தொடங்க பட்டியலின மக்களுக்கு  மானியத்துடன் கடனுதவி வழங்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த தொழிற்கூடங்கள் 28 ஆண்டுகளாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக்கிடக்கின்றன. ஒரு தொழிற்கூடம் கூட பயனாளிக்கு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டன.

இதனால், பராமரிப்பின்றி கதவுகள் கரையான்களால் அரிக்கப்பட்டும்,  ஐன்னல்கள் உடைந்தும்,  கட்டுமானங்கள் சிதிலமடையும் நிலையில் புதர்மண்டி காட்சியளிக்கின்றன.  மக்கள் நடமாட்டம் இல்லாத இந்த தொழிற்கூடங்கள் சமூக விரோதிகளின் கூடங்களாக மாறி சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த பகுதியில், 48 ஏக்கர் நிலத்தை வேறு நபர்களுக்கு தொழில் தொடங்க சில ஆண்டுகளுக்கு முன் சிப்காட் நிர்வாகம் ஓதுக்கீடு செய்ததும் சர்ச்சையானது.

கடனை திருப்பி வசூலிப்பதில் சிரமம் ஏற்படும் எனக்கூறி தாட்கோ அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதும், கூடுதல் நிபந்தனைகள் விதிப்பதுமே இத்தகைய நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

சிப்காட் நிலம் கையகப்படுத்தியதில் இன்னும் சில விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு தரப்படவில்லை என்ற புகார் உள்ள நிலையில், கையகப்படுத்திய நிலத்தில் உருவான இந்த தாட்கோ தொழிற்கூடம், 25 ஆண்டுகளாக மூடிக்கிடப்பது இப்பகுதி மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது்.

பட்டியலின மக்கள் தொழில் தொடங்க தடையாக உள்ள காரணத்தை கண்டறிந்து அதனை களையவும், நிபந்தனைகளை தளர்த்தி அவர்கள் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கவும் அரசும், ஆதிதிராவிடர் நலத்துறையும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

MUST READ