Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூரில் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு நிர்வாகம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திருவாரூரில் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு நிர்வாகம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

-

- Advertisement -

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்வதற்கு அரசு தயார் நிலையில் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திருவாரூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக மழை பெய்தால் கடும் பாதிப்பு ஏற்படகூடிய சூழ்நிலை இருந்ததாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கையால் அந்தப் பகுதியில் தற்போது எந்த பாதிப்பு ஏற்படாமல் மக்கள் நல்ல நிலைமையில் உள்ளதாகவும் தெரிவித்தார். கனமழை காரணமாக தற்போது வரை திருவாரூர் மாவட்டத்தில் 300 ஹெக்டேர் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது செய்த ஆய்வு முடிவுகளை  முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், திருவாரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட காயத்ரி கிருஷ்ணனும் தனியாக ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவையும் தமிழக முதல்வருக்கு சமர்ப்பிக்க உள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். தாழ்வான பகுதிகளில் இருக்கும் வடிகால்களை தற்போதைய அரசு முழுமையாக சீரமைத்து இருப்பதால் அந்த பகுதிகளில் தற்போது மழைநீர் இல்லாமல் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அங்கேயே தற்போது வசித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி திருவாரூர் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்று கூறிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை பெய்தால் ஒருவேளை பாதிப்புகள் இருக்கலாம் என்றும், அதையும் சரி செய்யக்கூடிய வகையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், எந்த சூழல் வந்தாலும் அதனை எதிர் கொள்வதற்கு அரசு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்

MUST READ