ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் சர்ச்சை பேச்சு- வலுக்கும் கண்டனம்
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளிநாட்டு அமைப்புகள் சில ஏராளமான பணத்தை கொடுத்து உள்ளூர் மக்களை போராட்டத்துக்கு தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டதாகவும், கூடங்குளம் அணு உலை போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதியே காரணம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40 % தாமிர உற்பத்தியை பூர்த்தி செய்தது நாட்டின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வகையில் ஸ்டெர்லைட் எதிராக வெளிநாட்டு நிதி மூலம் போராட்டம் தூண்டிவிடப்பட்டது ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு கவலைக்குரியது என்றும் ஆளுநர் பேசியிருந்தார்.
ஆளுநரில் பேச்சிக்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு சதியால் தூண்டப்பட்டு நடத்தப்பட்டது என்று தமிழ்நாடு ஆளுநர் கூறியிருப்பது போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த மக்களின் உறவினர்களிடம் அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் கூற்றில் உண்மையிருக்கும்பட்சத்தில் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். அதை விடுத்து ஸ்டெர்லைட் ஆலையால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டு தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் தியாகத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. மேலும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் மாளிகை கிடப்பில் வைத்திருந்தாலே அது ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று பொருள் என ஆளுநர் கூறியிருப்பதும் ஏற்புடையதல்ல” என சாடியுள்ளார்.
இதேபோல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “மக்களின் வரிப்பணத்தினை சம்பளமாகப் பெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியின் கொள்கைக்கு முரணாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகாரர் போல பேசி ஆளுநர் அவலத்தை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித், “ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது வேலையை விட்டு மற்ற வேலைகளை செய்துவருகிறார். தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை சொல்லி சர்ச்சையை ஏற்படுத்திவருகிறார். இது தவறு” எனக் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ”ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம். இன்றைய ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை பற்றி பேசுகிறார். நான் ஆளுநருக்கு சவால் விடுகிறேன் தூத்துக்குடியில் சென்று இந்த கருத்தை பேச முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.