தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வந்தது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு இழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே, காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பதிவாகியது. இதேபோல் கொள்ளிடத்தில் 13 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது.
தொடர் மழையை அடுத்து மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேவேளையில் மழை எதிரொலியாக கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.