விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை போலியாக உருவாக்கி கொடுத்ததே நான் தான் என்று சேலத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் இயக்குனர் ராஜ்குமார். இவர் வெங்காயம், பயாஸ்கோப் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் இயக்குநர் ராஜ்குமார், தனது முகநூல் பக்கத்தில் இன்று பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை தான் எடிட்டிங் செய்து கொடுத்ததாகவும், அவர் பிரபாகரனை சந்தித்து இருக்க வாய்ப்பே இல்லை என்றும் பதிவிட்டு இருந்தார். அவரது சமூக வலைதள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் ராஜ்குமார் கூறியதாவது:- கடந்த 2007 மற்றும் 2008ஆம் ஆண்டு கால கட்டத்தில் நான் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் பணியாற்றி வந்த செங்கோட்டையன் என்பவர், என்னிடம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பலருடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும், சீமானின் புகைப்படத்தையும் கொடுத்து, இருவரும் சேர்ந்து இருப்பது போன்று எடிட்டிங் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு இணங்க நான் பிரபாகரன் மற்றும் சீமான் ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை உருவாக்கி கொடுத்தேன்.
ஆனால் அந்த படத்தை அரசியலுக்கு பயன்படுத்தியபோது இது குறித்து செங்கோட்டையனிடம் கேட்டபோது அவர், சீமான் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்று கூறியதோடு, இது குறித்து யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டார். ஆனால் தற்போது சீமான் தந்தை பெரியார் பற்றி அவதூறான கருத்துகளை கூறி வருவதால் இதனை வெளியே சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சீமான் பிரபாகரனை சந்தித்து இருக்க வாய்ப்பே இல்லை. அந்த புகைப்படத்தை நான் தான் எடிட்டிங் செய்து கொடுத்தேன் என்பது உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.