திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி
தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகளில் மதுபானம் பரிமாறுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு அனுமதியை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டண விவரங்களோடு அரசிதழை வெளியிட்டு உள்துறை அமைச்சர் செயலாளர் பணீந்திர ரெட்டி இதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளார்.
மது உரிமங்கள் மற்றும் வழங்கல் விதிகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி திருமண மண்டபங்கள், விழாக் கூடங்கள், விளையாட்டுத் திடல்கள், வீடுகள் ஆகியவற்றில் விழாக் காலங்களுக்குத் தற்காலிக உரிமம் பெற்று, மதுபானங்கள் வழங்கலாம். இனி, விளையாட்டுத் திடலுக்கு பார்வையாளராகச் செல்வோர், திருமணங்களுக்குச் செல்வோர், டாஸ்மாக் கடைகளுக்கு நேரடியாகச் சென்றோ ஆட்களை அனுப்பியோ மதுபானங்கள் வாங்க வேண்டியதில்லை. இருந்த இடத்திலேயே அவை கிடைக்கும். இதற்கென்று விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்களும். திருமண மண்டபத்தினரும், இல்லத் தலைவர்களும் ஒரு குறிப்பிட்ட தொகையை மாவட்ட ஆட்சியரிடம் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.