லாரி – ஆம்னி வேன் மோதி விபத்து- 3 பேர் பலி
வத்தலகுண்டு அருகே லாரி – ஆம்னி வேன் மோதி கோர விபத்து, வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு – தேனி தேசிய நெடுஞ்சாலையில் வத்தலகுண்டு அருகே கணவாய் மேடு என்ற இடத்தில் வண்டி பெரியாரில் இருந்து கோயம்புத்தூருக்கு குமளி, முருகடி பகுதியை சேர்ந்த ஜார்ஜ் மகன் குஞ்சுமென் (49) என்பவர் டீ தூள் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியும், திருவாரூரில் இருந்து கொடைக்கானலுக்கு சென்ற ஆம்னி வேனும் மோதி கோர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற வத்தலக்குண்டு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விசாரணையில் ஆம்னி வேனில் வந்த மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த ரபிக் (50), திருவாரூர் மாவட்டம் தச்சணம் பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் வீரமணி(52), திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த சமீரா பானு சாதிக் (41) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.
விபத்தில் திருவாரூர் மாவட்டம் தச்சணம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவருடைய மகன் சேகர் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான மூன்று பேரின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.