கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தார்.

கரூரில் நேற்று இரவு தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். இதனை தொடர்ந்து, திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக கரூர் அரசு மருத்துவமனை வந்தடைந்தார். அங்கே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கூட்டநெரிசிலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார். இதனை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- கனத்த இதயத்தோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். மிகுந்த துயரத்துடன் பேசுகிறேன். கரூர் கொடூரத்தை விவரிக்க முடியாது. 39 உயிர்கள் இழந்துள்ளோம். ஆண் 13 பேர், பெண் 17 பேர், பெண் குழந்தைகள் 4 ஆண் குழந்தைகள் 4 பேர். நடந்த துயரத்தை பார்த்து வீட்டில் இருக்க என்னால் முடியவில்லை. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வேன்? தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத துயரம் இது. இனி எப்போதும் நடக்கக்கூடாத சம்பவம் இது. அரசியல் நோக்கத்தோடு பேச நான் தயார் இல்லை. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் ஆணையம் அமைத்துள்ளேன். ஆணையம் சொல்லும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.