கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்த 39 பேரில், 31 உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதாக, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்துள்ளார்.

கரூர் அரசு மருத்துவமனையில், கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சுகந்தி ராஜகுமாரி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகந்தி ராஜகுமாரி தெரிவித்ததாவது:- கரூரில் தவெக பிரச்சாரத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 31 பேரின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மற்றவர்கள் ஆக்சிஜன் தேவையின்றி நலமுடன் உள்ளனர்.
தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 81 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக 52 பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலத்தில் இருந்து 3 மருத்துவக் குழுக்கள் வந்துள்ளன. மேலும், நாமக்கல், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்தும் மருத்துக் குழுக்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். பிரேத பரிசாதனைக்கு என்று சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். 70-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.