கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற வேல்முருகன், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கரூர் துயரச்சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “இந்த நிகழ்வு விபத்து அல்ல, நடந்தது படுகொலை” என அவர் கூறினார்.

விஜயின் தாமதமான வருகையே நெரிசலுக்குக் காரணம். அவரை காணபதற்காக பொதுமக்கள் உணவருந்தாமல், தண்ணீர் குடிக்காமல், கழிவறை வசதிக்கூட இல்லமல் 10 மணி நேரமாக காத்திருந்துள்ளனர். இதனால், குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் என பலரும் சிரமத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளாா்.
கூட்டம் அதிகரிப்பதை அறிந்தும், போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தவில்லை என்பதால் இத்துயரம் நிகழ்ந்ததாக அவர் குற்றம்சாட்டினார். விஜயின் படத்துடன் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்தது கூட்டத்தில் குழப்பத்தை அதிகரித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது ஒன்றும் விபத்தல்ல, நடந்திருப்பது படுகொலை. அரசு இந்த சம்பவத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். உயிரிழந்த 41 குடும்பங்களுக்கும் விஜய் நேரடியாக சென்று இழப்பீடு வழங்க வேண்டும்.
இனி எந்தத் தலைவருக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கக் கூடாது. எதிர்காலத்தில் நடத்தப்படும் பிரச்சார கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சரியான நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அதனை அரசு உறுதி செய்த பின்பே பொது கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பதால், அவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம். மேலும், கரூர் சம்பவம் அரசியல் கட்சிகளும், அரசும் எதிர்காலத்தில் அதிக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய பாடமாக இருக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.


