கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நாளை பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.

மதுரையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று பிரச்சாரம் மேற்கொண்டபோது பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் பலியான சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க கோரி தவெக சார்பில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியின் வீட்டிற்கு சென்று தவெக தரப்பில் முறையிடப்பட்டது. தவெக சார்பில் அக்கட்சியின் நிர்வாகி சி.டி. நிர்மல்குமார், வழக்கறிஞர் அறிவழகன் ஆகியோர் நீதிபதி முன்னிலையில் முறையிட்டனர். அப்போது, கருர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால் நாளை பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்ததாக கூறினார். மேலும், கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.