கரூர் கூட்ட நெரிசல் மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள விஜய் நீதிமன்றத்தை நாடுவதாகவும், இது அப்பட்டமான அயோக்கியத்தனம் என்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:- நடிகர் விஜய் அவர்களை காணவந்த ரசிகர்களும் தொண்டர்களுமாக 39 பேர் மரணித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. எமது தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கரூரை நோக்கி பயணித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால்,நேற்று கரூரிலிருந்தே பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறாமல் அவசரம் அவசரமாக எஸ்கேப்பாகி சென்னை வந்து விட்டார். இதுவரை தவெகவின் அடுத்த கட்ட தலைவர்கள் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்கவில்லை.
இந்த சூழலில், சிபிஐ விசாரிக்க வேண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளது தவெக.
இறந்து போனவர்களின் உடலை கூட இன்னும் அடக்கம் செய்யவில்லை.
அவர்களின் கண்ணீர் கூட வடிவது நிற்கவில்லை. அதற்குள்ளாகவே இந்த மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய். இது அப்பட்டமான அயோக்கியத்தனம். மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்ல அஞ்சி, நீதிமன்றத்தை நாடுவது ஒன்றிய பாஜக அரசு காப்பாற்றும் என்னும் நம்பிக்கையில் தானா?, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.