ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி
பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுதமுடியும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தால் கூட ஹால் டிக்கெட் வழங்குகிறோம். மாணவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என முயற்சிக்கிறோம். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வேலைத்தேடி குடும்பத்துடன் புலம்பெயர்ந்ததால் மாணவர்கள் பள்ளிகளுக்கு திரும்பவில்லை. கல்வியை புறந்தள்ளிவிட்டு பொருளாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்ற பெற்றோர்களின் மனநிலையால் மாணவர்கள் பொதுத்தேர்வை தவிர்க்கின்றனர்.

10ஆம் வகுப்பில் ஆல் பாஸ் போடப்பட்டது போல 12 ஆம் வகுப்பிலும் ஆல் பாஸ் வழங்கப்படும் என மாணவர்கள் கருதுகின்றனர். 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பயப்படுகின்றனர்” எனக் கூறினார்.