கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது- அமைச்சர் மா.சு. எச்சரிக்கை
கொரோனா அதிகரித்தாலும் தமிழகம் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் XBB , BA2 வகை வைரஸ் பரவி வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 70க்கும் மேல் அதிகரித்துள்ளது. கொரோனா அதிகரித்தாலும் தமிழகம் பாதுகாப்பாக இருப்பதால் மக்கள் பதற்றப்பட தேவையில்லை. தமிழகத்தில் இரண்டரை மாதத்துக்கு முன் 2 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 76 ஆக அதிகரித்துள்ளது.
H3N2 காய்ச்சல் பாதிப்புக்கு தமிழகத்தில் 15 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர். வாரந்தோறும் 25 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்துவருகிறோம். 2 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறன் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. கொரோனா இரண்டாம் அலையின்போது தயார் செய்த படுக்கை வசதிகள் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன. புதியவகை கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. உருமாறிய ஒமிக்ரான் கொரோனா தற்போது பரவிவருகிறது. மராட்டியம், குஜராத், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.