அரசு திட்ட பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெற்றுவருகிறது- மு.க.ஸ்டாலின்
தலைமைச் செயலகம், ஒவ்வொருவரின் முன்னேற்ற செயலகமாக மாறியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி, கீதாஜீவன், சக்கரபாணி, சாமிநாதன், பெரிய கருப்பன், காந்தி, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசு திட்ட பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெற்றுவருகிறது. தலைமைச் செயலகம், ஒவ்வொருவரின் முன்னேற்ற செயலகமாக மாறியிருக்கிறது. திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதம், திட்டத்திற்கான செலவினத்தை அதிகரிக்கும். அரசின் நடவடிக்கையால் சென்னையில் பெருமழை வந்தாலும்,
மழைநீர் தேங்குவதில்லை. மக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு இன்ஜினாக உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி மனந்திறந்து பாராட்டியதை நினைவுகூர்கிறேன். மதுரையில் நூற்றாண்டு நூலகம் விரைவில் திறக்கப்படும். முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் கடந்த 2 ஆண்டுகளில் பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு என்னென்ன தேவையோ அது நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.


