“குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயலில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே அவமான சின்னம்”
விருத்தாச்சலத்தில் பள்ளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
விருத்தாச்சலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் பக்கிரிசாமி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திமுகவை சேர்ந்தவர் என தெரிந்ததும், உடனடியாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , “எங்களது அரசைப் பொறுத்தவரையில், நான் செய்தியைக் கேள்விப்படவில்லை. தொலைக்காட்சியில்தான் பார்த்தேன் என நான் சொல்ல தயாராக இல்லை. இந்த செய்தியை அறிந்தவுடனேயே சம்பந்தபட்ட அதிகரிகளோடு பேசினேன். சம்பந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்து அது தொடர்பான செய்தியை எனக்கு தந்தார்கள். இந்த அரசைப் பொறுத்தவரையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், அதிலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் வமானச் சின்னம் எனக் கருதுகிறோம். அந்த வகையில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுத்திடுவோம் என்பதை உறுதியோடு அவையில் பதிவு செய்கிறேன்” என்றார்.