நாட்டின் பிரதமர் என்கிற மிக உயர்ந்த பொறுப்பை உணராமல் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய வகையில் மாநில மக்களுக்கு இடையே மோதலை உருவாக்கக்கூடிய வகையில் மோடி செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் மே தின கொடியை ஏற்றி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வருவதாகவும், இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு நிகழ்ந்த அநீதிகளுக்கு எதிராக போராட உறுதி எடுக்கும் நாளாக இது இருப்பதாகவும் கூறினார். நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் போராடி பல தியாகங்கள் செய்து பல்வேறு உரிமைகள் மற்றும் சட்டங்களை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் தற்போது, ஒன்றியத்தில் அமைந்துள்ள பாசிச பாஜக அரசு அந்த தொழிலாளர் சட்டங்களை மாற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நான்கு தொழிலாளர் சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாக முத்தரசன் குற்றம் சாட்டினார். இந்த சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு மிகவும் முக்கியம் எனக் கூறிய அவர், பல்வேறு மதங்களையும் கலாச்சாரங்களையும் கொண்ட நாட்டில் பிரிவினையை தூண்டும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றார். நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி தனது பொறுப்பை உணராமல், மாநில மக்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும் அவர் விமர்சித்தார்.
உத்திரப்பிரதேச மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் ஆற்றி உள்ள உரை மிக மிக மோசமானது என்றும் மிக மிக கண்டிக்கத்தக்கது என குற்றம்சாட்டிய முத்தரசன், நரேந்திர மோடி நாட்டின் பிரதமரா அல்லது பிரிவினை வாதியா? என்று கேள்வி எழும் அளவிற்கு அவரின் உரை இருந்ததாக கூறினார். நாட்டின் ஒற்றுமைக்காக கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இல்லை என்ற ஒன்றிய அரசு கூறினாலும், நாட்டில் பல்வேறு பகுதிகளில் உணவகங்கள் மூடப்பட்டு உள்ளது. ஏரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தாா். வருகின்ற 4ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என கூறியுள்ளாா்.
கடும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் முன்னேறியவர் நடிகர் அஜித் – அண்ணாமலை
