
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வழகிடக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்கியது. அதன்பிறகு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவந்த நிலையில், வங்கக்கடலில் கடந்த அக்.26ம் தேதி உருவான ‘மோந்தா’ புயல் காரணமாக வட தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. முதலில் சென்னை அருகே இந்த புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆந்திர மாநில காக்கிநாடா அருகே புயல் கரையை கடந்தது. மணிக்கு 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி, ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களை புரட்டிப்போட்டது மோந்தா புயல். அத்துடன் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் ஆந்திராவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இருப்பினும் இந்த புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை கிடைக்கவில்லை. வட தமிழக மாவட்டங்களில் மட்டும் அக்.28ம் தேதி கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தெற்கு மியான்மர் கடலோர பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு மேல் காணப்படும் மேலடுக்கு சுழற்சியால் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மியான்மர் நோக்கின் நகரும் என்றும், இதனால் தமிழகத்திற்கு மழை பாதிப்புகள் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


