தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 28,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கா்நாடக மாநில காவிரி நீா்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரிஆற்றில் வினாடிக்கு சுமாா் 19000 கனஅடி வீதம் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 13,000 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை திடீரென 28,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு தொடா்ந்து 34வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 21,500 கனஅடி நீர்வரத்தாகும் நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 16,000 கனஅடியில் இருந்து 21,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.