விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியதால், மனமுடைந்த மனைவி மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு மருத்துவர் தான் காரணம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி் பகுதியை சேர்ந்தவர் பூபாலன்(24). இவர் அதே பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த ஓராண்டுக்கு முன் தனது மாமன் மகளான மேகலா(21) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம்( ஜூன் 21) இரவு கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பூபாலன் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் பூபாலனின் உடல்நிலை குறித்து மனைவி மேகலா நேற்று மாலை மருத்துவரிடம் கேட்டுள்ளார். அதற்கு பூபாலனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மேகலா, நேற்று (ஜூன் 22) இரவு ஏழு மணி அளவில் மருத்துவமனை வளாகத்திலேயே பிரேத பரிசோதனை செய்யும் அறைக்கு அருகே சற்று இருட்டாக இருக்கும் பகுதிக்குச் சென்று அங்கிருந்த மரத்தின் கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனிடையே மேகலாவை காணவில்லை என நீண்ட நேரமாக தேடிய உறவினர்கள், அவர் மரத்தில் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் அரசு மருத்துவமனை புற காவல் நிலைய போலீசார், மேகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மேகலாவின் தற்கொலைக்கு மருத்துவர் தான் காரணம் என்றும் , கணவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என கூறிய மருத்துவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறி உறவினர்கள் நள்ளிரவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கூறிய காவல்துறையினரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சேலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் மேகலாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் விஷம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூபாலனும் இன்று( ஜூன் 23) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கணவன் பூபாலன் மற்றும் மனைவி மேகலா ஆகிய இருவரின் சடலமும் சேலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.