தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட முக்கியமான பத்திரப் பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். சொத்து மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் இந்த மசோதா, 2025ல் பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆளுநர் அதனை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பிய நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்த மசோதாவின் படி, இனி பத்திரப் பதிவு செய்யும்போது சொத்து தொடர்பான அசல் ஆவணங்களை தாக்கல் செய்வது கட்டாயம் ஆகும். பத்திரப் பதிவுக்கு முன்பாக 10 நாட்களுக்குள் பெற்ற வில்லங்க சான்றிதழ் மற்றும் சொத்தின் மூலப்பத்திரமான அசல் ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மூதாதையர் சொத்தாக இருந்து, மூலப்பத்திரம் இல்லாத சூழலில், வருவாய்த் துறை வழங்கிய பட்டா சமர்ப்பித்தால் மட்டுமே பத்திரப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என மசோதாவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்ற நபரிடமிருந்து தடையில்லா சான்று (No Objection Certificate) பெற்று அதனை பதிவின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
அசல் ஆவணங்கள் தொலைந்திருந்தால், காவல் நிலையத்தில் புகார் அளித்து, ‘கண்டறிய முடியவில்லை’ என்ற சான்றிதழ் பெற வேண்டும். அதோடு, அந்த ஆவணங்கள் தொலைந்தது குறித்து உள்ளூர் நாளிதழில் விளம்பரம் வெளியிட்டு, அதன் நகலையும் பத்திரப் பதிவின் போது இணைக்க வேண்டும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”உங்க கனவை சொல்லுங்க” சமூக ஊடகப் போட்டி – அனைவரும் பங்கேற்கலாம் என அரசு அறிவிப்பு


