குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு, பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் மறைவால் மிகுந்த வருத்தம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். டெல்லி கணேஷ் அசாத்தியமான நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காகவும், தலைமுறைகள் கடந்து பார்வையாளர்களுடன் தொடர்புகொள்ளும் திறனுக்காகவும் அன்புடன் நினைவுகூரப்படுவார் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, டெல்லி கணேஷ் நாடகத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி கணேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.