தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மேலடுக்கு வளிமண்டல கீழ் சுழச்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் நேற்று 3 இடங்களில் மிக கனமழையும் 17 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பட்டுக்கோட்டையில் 16 செ.மீ மழையும் , சிவகங்கை சிங்கம்புனரியில் 15 செ.மீ மழையும், மன்னார்குடி 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இருப்பினும் வழக்கமாக பெய்யும் கோடை மழையை விட இந்த ஆண்டு 44% குறைவாக பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும், இன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் மழைபெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. அந்தவகையில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, அரியலூர், திருவாரூர், பெரம்பலூர் , இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. அதேபோல் சென்னையில் கரு மேகங்கள் சுழ்ந்துள்ளதால் லேசான மழை பெய்ய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.