Homeசெய்திகள்தமிழ்நாடு"சினிமா பஞ்ச் பேசி மக்களை மயக்கிவிட்டார்கள்; த.வெ.க அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது!" – ஆர்.பி....

“சினிமா பஞ்ச் பேசி மக்களை மயக்கிவிட்டார்கள்; த.வெ.க அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது!” – ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்

-

- Advertisement -

வசீகரமான சினிமா வசனங்களையும் பஞ்ச் டயலாக்குகளையும் பேசி, மக்களிடையே ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டார். அரியணையைப் பயன்படுத்தி அதிமுகவை அழித்துவிடலாம் என்ற த.வெ.க-வின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது; இந்த முரண்பாடான கூட்டணி அரசு 5 ஆண்டுகள் முழுமை பெறாது” என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஆர்.பி. உதயகுமார்

மதுரை சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் சிலர் சமீபத்தில் த.வெ.க-வில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து, அதிமுகவை வலுப்படுத்தும் நோக்கில் திருவேடகம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிய ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

we-r-hiring

தொண்டர்களை உற்சாகப்படுத்த 10 வகை அசைவ விருந்து!
​புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய செயலாளர் பெரியசாமி மணி ஏற்பாட்டில், கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன், கரண்டி ஆம்லெட் என 10 வகையான அசைவ உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. இந்த அசைவ விருந்தினை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முறைப்படி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி. உதயகுமார், த.வெ.க அரசை அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்துப் பேசியதாவது:

​”ரூ.800 கோடி லஞ்சப் புகாரும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும்!”
​”விஜய் பதவியேற்ற இரண்டே மாதங்களில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போய்விட்டது; பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இந்த அரசால் முடியவில்லை. த.வெ.க அரசின் அமைச்சர் ‘கில்லி’ சரத்குமார் என்பவரே போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார் என்ற சர்ச்சை நீடிக்கிறது.

தூய்மையான ஊழலற்ற ஆட்சி தருவோம் என்று கூறிவிட்டு, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ₹5 லட்சம் முதல் ₹30 லட்சம் வரை, ஏறத்தாழ 120 கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டதா இல்லையா என்பதை முதல்வர் விசாரணை நடத்தி விளக்க வேண்டும். அதேபோல், மதுபான விலையை உயர்த்துவதற்காக மதுபான ஆலை உரிமையாளர்கள் 11 பேரிடம் ₹800 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையையும் முதல்வர் விஜய் பகிரங்கப்படுத்த வேண்டும். நிதியமைச்சரின் உடன்பிறந்த சகோதரர் தாக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.”

அமைச்சர்களின் ‘ரீல்ஸ் மோகம்’ – கல்வி சீரழிவு:
​”தற்போதுள்ள பல அமைச்சர்கள் பள்ளிகளுக்குச் சென்று ரீல்ஸ் செய்யும் மோகத்தில் மூழ்கியுள்ளனர். இதனால் பள்ளி மாணவர்களின் கல்வி சிதையும் ‘அட்ராசிட்டி’ நடக்கிறது. காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பள்ளி மாணவிகளிடம் அருவருக்கத்தக்கச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது வேதனையளிக்கிறது” என்று சாடினார். “அப்பட்டமான குதிரை பேரம் நடக்கிறது!”

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து வருவது குறித்துப் பேசிய அவர்:
​”த.வெ.க அரசு தங்களுக்கு 108 இடங்களில் பெரும்பான்மை இருப்பதை நிரூபிப்பதற்காக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் இருப்பிடத்திற்கே சென்று பொன்னாடை போர்த்தி, அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறி குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. இது மிகப்பெரிய ஜனநாயக விரோதப் போக்கு.

தேர்தல் சட்ட விமுறைகளை மீறி கூட்டணி என்ற பெயரில் சிலர் அமைச்சரவையில் இடம் பெற்று மௌன சாமியார்களாக உள்ளனர். வைகோவின் கட்சி எம்.எல்.ஏ-க்கள் இருவர் ராஜினாமா செய்தபோது, இடைத்தேர்தலில் அவர்களுக்கு வைகோவே பிரச்சாரம் செய்வேன் என்றார். இது அப்பட்டமான குதிரை பேரம் எனப் பேசப்பட்டதால் தற்போது வைகோ அந்தர் பல்டி அடித்துள்ளார். தமிழக ஆளுநரே இத்தகைய குதிரை பேரத்தை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். த.வெ.க-வின் இந்த மைனாரிட்டி கூட்டணி அரசு நீடித்தால் 356-வது சட்டப்பிரிவு (குடியரசுத் தலைவர் ஆட்சி) பாயுமா என்பது கேள்விக்குறியே!”
​”

முரண்பாட்டின் மொத்த உருவம் த.வெ.க கூட்டணி”
​”த.வெ.க கூட்டணியில் உள்ள அமைச்சர் நிர்மல்குமார் 5 வருடத்தில் 5 கட்சி மாறியவர்; ஆதவ் அர்ஜுனா 3 கட்சி மாறியவர். இவர்களை முதல்வர் விஜய் கண்காணிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு ‘ஸ்டாலின்தான் முதல்வர்’ என்று பேசிய வைகோ, தற்போது ‘விஜய்தான் நிரந்தர முதல்வர்’ என்கிறார். இது ஒரு முறையற்ற, முரண்பாடான கூட்டணி. எந்த நேரத்திலும் கூட்டணி கட்சிகள் விஜய்யை நிராதரவாக விட்டுவிட்டுச் செல்வார்கள்.

​விஜய் பேசியதற்கும் தற்போதைய அவரது செயல்பாட்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மேகதாது அணைப் பிரச்சினை குறித்து அவர் பேசவில்லை; விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யவில்லை. 125 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார், ஆனால் அதற்கு அவரது கூட்டணி கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முதல்வருக்குச் சுயமாகப் பேசத் தெரியாது, எதற்கும் அவர் பேசவும் மாட்டார்.

​த.வெ.க அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பெரிய தகராறாக மாறியுள்ளது. ஒடுகாலிகள் இரண்டு பேர் போவதால் அதிமுக என்ற பேரியக்கம் ஒருபோதும் அழியாது. வரவிருக்கும் இடைத்தேர்தலில் மக்கள் ‘நிழல் எது, நிஜம் எது’ என்பதைக் கண்டறிந்து நல்ல தீர்ப்பளிப்பார்கள். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி” என்று ஆர்.பி. உதயகுமார் அதிரடியாகத் தெரிவித்தார்.

MUST READ