Homeசெய்திகள்சிறைவாசிகள் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன்? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி...

சிறைவாசிகள் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன்? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி நோட்டீஸ்!

-

- Advertisement -

குற்றம் செய்து சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பங்களுக்குத் தெலங்கானா மாநிலத்தைப் போல ‘வட்டியில்லா நிதியுதவி மற்றும் சுழற்சி நிதித் திட்டம்’ வழங்குவது குறித்து, தமிழக அரசின் உள்துறை மற்றும் சிறைத்துறைத் தலைமை இயக்குநர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.சிறைவாசிகள் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன்? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி நோட்டீஸ்!

​மதுரையைச் சேர்ந்த சமூகப் ஆர்வலர் ராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவின் விரிவான பின்னணி வருமாறு, ​”சட்டப்படி சிறைத்தண்டனை என்பது குற்றம் செய்த ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே விதிக்கப்படும் தண்டனையாகும். ஆனால், நடைமுறையில் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபர் சிறைக்குச் செல்லும்போது, அவரது மனைவி, குழந்தைகள், முதிய பெற்றோர் போன்ற குற்றமற்ற குடும்ப உறுப்பினர்களும் கடுமையான பொருளாதார, சமூகப் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இதனால், அவர்களால் கல்வி, மருத்துவம், உணவு, வீட்டு வாடகை போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடிவதில்லை. ​கடந்த சில ஆண்டுகளாகத் தென் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் சிறைவாசிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் சமூகப் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார நிலையை ஆய்வு செய்தோம். அதில், குடும்ப வறுமையால் பல குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியதும், பெண்கள் கடுமையான கடன் சுமையால் கூலி வேலைக்குச் சென்றதும், வயதான பெற்றோர் பேரக்குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவிக்கும் அவல நிலையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.”

we-r-hiring

​”சிறைச்சந்தை கோடிக்கணக்கான லாபம் எங்கே போகிறது?”
​மனுதாரர் தனது மனுவில் தமிழக சிறைத்துறையின் வருவாய் ஆதாரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.​தமிழக சிறைத்துறையில் நெசவு, தையல், காலணி தயாரிப்பு, பேக்கரி, தச்சு வேலை, விவசாயம், செங்கல் தயாரிப்பு, புத்தக பைண்டிங், சோப்பு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கைதிகள் மூலம் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. ​இதன் மூலம் ஆண்டுதோறும் அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ​மேலும், “Freedom” (ஃபிரீடம்) மற்றும் “சிறை சந்தை” என்ற பெயர்களில் செயல்படும் அங்காடிகள் மூலமும் பெருமளவில் லாபம் ஈட்டப்பட்டு வருகிறது. இந்த லாபம் அரசுக்கும், சிறைத்துறை நல நிதிக்கும், சிறைத்துறை உற்பத்தி நிதிக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.

​வழக்கின் கோரிக்கையும் நீதிமன்றத்தின் உத்தரவும்
​எனவே, சிறைத்துறை ஈட்டும் இந்த லாப நிதியில் ஒரு பகுதியைச் சிறைவாசிகளின் குடும்ப மேம்பாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும். மனித கண்ணியம், வாழ்வாதார உரிமை, கல்வி உரிமை ஆகியவற்றின் அடிப்படையில், தெலங்கானா மாநிலத்தில் உள்ளதைப் போலச் சிறைவாசிகளின் குடும்பங்களுக்கான “வட்டியில்லா நிதியுதவி மற்றும் சுழற்சி நிதித் திட்டத்தை” தமிழகத்திலும் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. ​இந்த பொதுநல வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ​மனுவை விரிவாக ஆராய்ந்த நீதிபதிகள், இந்தத் திட்டம் தொடர்பாகத் தமிழக அரசின் உள்துறை மற்றும் சிறைத்துறைத் தலைமை இயக்குநர் (DG of Prisons) ஆகியோர் அடுத்த நான்கு வாரங்களுக்குள் முறைப்படி பதில் அளிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.

‘அவர்லேன்ட்’ ஒப்பந்தத்தை ரத்து செய்ய முதல்வர் விஜய்க்கு எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தல்!

MUST READ