“தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத் துறையின் பெயரை ‘சமூக நீதித்துறை’ என மாற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல், த.வெ.க அரசின் குதிரை பேர அரசியல் மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தை போல தற்போது அதிக விலைக்குப் போகிறது” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அரசின் புதிய கொள்கை முடிவுகள் குறித்துப் பேசியதன் விபரம் பின்வருமாறு, தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் பெயரை ‘சமூக நீதித்துறை’ என மாற்றியமைக்க எடுத்துள்ள முடிவுக்குக் கி.வீரமணி தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”ஆதிதிராவிடர் நலத் துறையின் பெயரை மாற்றுவது முறையானதல்ல, அது ஏற்கத்தக்கதும் அல்ல. அந்தத் துறையின் பெயர் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே தொடர வேண்டும். வேண்டுமானால், அந்தத் துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகள் போன்றவற்றுக்குச் ‘சமூக நீதி விடுதி’ என்று பெயர் வைத்துக் கொள்ளலாமே தவிர, ஒட்டுமொத்த துறையின் அடையாளத்தை மாற்றக் கூடாது.”
த.வெ.க அரசின் குதிரை பேரம்: “அதிக விலைக்குப் போகும் சந்தை”
தமிழகத்தில் நிலவி வரும் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மற்றும் குதிரை பேரப் புகார்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “நாம் இதுவரை மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தை போன்றவற்றைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்போது தமிழ்நாட்டில் குதிரைச் சந்தை வியாபாரம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. த.வெ.க அரசின் இந்தக் குதிரை பேர அரசியல் தற்போது மிக அதிக விலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது” என்று மிகக் காட்டமாக விமர்சித்தார்.
யுஜிசி (UGC) பிரதிநிதி விவகாரத்திற்கு எதிர்ப்பு
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி (UGC) பிரதிநிதியைச் சேர்க்கத் திட்டமிடுவது குறித்தும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். “பல்கலைக்கழகங்களுக்கு உரிய நிதியையே சரியாக ஒதுக்கீடு செய்யாத பல்கலைக்கழக மானியக் குழு (UGC), தற்போது தேடல் குழுவில் ஒருவராக உள்ளே வரத் திட்டமிடுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆதிதிராவிடர் நலத் துறை பெயர் மாற்றம் மற்றும் தற்போதைய த.வெ.க அரசின் அரசியல் நகர்வுகளைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளிப்படையாகச் சாடியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

