சாதிப் பிரிவுகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது- ஆர்.என்.ரவி
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி மருத்துவமனை கல்வி குழுமம் சார்பில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “சமூக நீதிக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும், மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக நீதி சார்ந்த பிரச்சனைகளையும் செய்தித்தாள்களில் காண முடிகிறது.
ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பிரிவினை வாத அரசியலை தவிர்த்தால் தான் சமூக பிரச்சனைகளை சரி செய்ய முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒரே குடும்பம் என கருத வேண்டும். அந்த வகையில் தான் மருத்துவ காப்பீடு திட்டமாக 5 லட்சம் ரூபாய் வழங்கும் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்தியா உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்துள்ளது. அதற்குப் பிறகான பிரிவினைவாத அரசியலால் தான் நமது நாடு பின்தங்கி இருந்தது.
1951 ஆம் ஆண்டில் இருந்த சாதிப் பிரிவுகள் இன்று இரட்டிப்பு எண்ணிக்கையாக அதிகமாகியுள்ளது. அது சார்ந்த பிரச்சனைகளும் அதிகமாகியுள்ளது. சாதிகளும் சாதிக்குள்ளான உட்பிரிவுகளும் போன்ற பிரிவினை எண்ணங்களும் நமது நாட்டை பாதித்து வருகின்றன. நாம் அனைவரும் ஒரே மரத்தின் இலைகளைப் போன்றவர்கள். ஒரே குடும்பத்தினர். மொழி, நிலம், இனம் ஆகியவற்றை தாண்டி நாம் அனைவரும் ஒரே குடும்பம் என கருத வேண்டும்.
அதை நோக்கி தான் இந்தியா சென்று வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுமையாக வளர்ச்சி அடைந்த நாடாக திகழும். இது மக்களின் பங்களிப்பால் தான் சாத்தியமாகும்.தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் என பல்வேறு துறைகளில் இந்தியா தலைமைத்துவத்தில் உள்ளது. இதில் நமது நாட்டின் இளைஞர்களின் பங்கு முக்கியமாக உள்ளது. நமது நாட்டின் நூறாவது சுதந்திரத்தை கொண்டாடும் சூழலில் இந்தியா உலக நாடுகளுக்கு தலைமையாக திகழும்” எனக் கூறினார்.